Thursday, June 10, 2010

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்யும் முறைகள்,

123 நானும், ’தியானம் செய்வது எப்படி?’ , ‘30 நாட்களில் தியானம் பழகுங்கள்’ ; ’இது தாண்டா தியானம்’ போன்ற தியான புத்தகங்களை 90A பேருந்து பிடித்து உக்கடம் சென்று பழைய புத்தக கடையில் பேரம் பேசி வாங்கி வந்து தூசி தட்டி படித்து பார்த்தேன்.

ஒன்றும் புரியவில்லை.

மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நன்கு குளித்து வித விதமான ஆசனங்களில் அமர்ந்து முயற்சி செய்தும் பார்த்தேன்.

எனக்கு தியானம் செய்வது எப்படி, தியானம் என்றால் எப்படி இருக்கும் என்று பிடிபடவில்லை.

பொதுவாக சரியாக புரிந்து கொள்ளாமல் புத்தகங்களை படித்து தியானம் செய்வது நலன் பயக்காது என்று சொல்வார்கள். அது உண்மையும் கூட.

இருந்தாலும் நான் தியானம் செய்து பழகிய கதையை உங்களுக்கு சொல்வதில் உவகை அடைகிறேன்.

’தியானம் என்றால் என்ன என்று ஒரு வரிக்கு மிகாமல் ஒரு சிறுகுறிப்பு வரைக:’ என்று யாராவது கேட்டால் – எண்ணங்கள் அற்ற நிலையில் அல்லது எண்ணங்கள் குறைந்த நிலையில் முழ்கி இருத்தல் தான் தியானம் என்று சொல்லலாம்.

நம் மனம் எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். இரவில் தூங்கும் போதும் கூட அது தன் செயல்பாட்டை நிறுத்துவதில்லை. அதை தான் கனவு என்கின்றோம்.

அப்படி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கும் மனதின் எண்ண ஓட்டத்தை குறைப்பது கண்டிப்பாக ஒரே நாளில் நடக்கக் கூடியது இல்லை.

மிதிவண்டி ஓட்ட பயிற்சியின் மூலமே பழக முடியும். ஆனால் ஒரு முறை அந்த சமனிலை (Balance) கிடைத்து விட்டால் அப்புறம் எப்போதும் மறக்காது.

அது போல் தான் தியானமும்.

ஆகவே அந்த நிலையை உணரும் வரை முயற்சிப்பது முக்கியம்.

சொல்லப் போனால் முயற்சிப்பது என்பதே தியானத்தை பொறுத்தவரை ஒரு தவறான வார்த்தை பிரயோகம் தான்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரயத்தனத்துடன் முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தியானத்தை விட்டு விலகிப் போகிறீர்கள்.

’அப்புறம் என்ன தான்யா செய்யணும்’ என்று கேட்டால், எதையும் எதிர்பாராமல் ஒரு ஒய்வு நிலையில் இருந்தாலே தியானம் ஏற்படும் என்று கூற வேண்டும்.

ஏனென்றால் கடும் முயற்சியுடன் இருக்கும் போது உங்கள் மனநிலை பரபரப்புடன் காணப்படும். அப்போது மன அலை வேகம் அதிக பட்சமாக இருக்கும். அது தியானத்திற்கு எதிரானதாகும். எண்ண அலையின் வேகம் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் எந்த வித எதிர்பார்ப்புடனும் இருக்கக் கூடாது என்று சொன்னேன்.

ஏனென்றால் எதிர்பார்ப்புடன் இருக்கும் போது மனம் ஒடிக் கொண்டே இருக்கும். ‘என்ன தியானம் இன்னும் வரலை..? தியானம் எப்படி இருக்கும்..? எனக்கு மட்டும் தியானம் ஏன் வர மாட்டேங்குது..? ஏதோ வித்தியாசாமா உணர்வு ஏற்படுதே இது தான் தியானமா? பறக்கற மாதிரி இருக்கும்னு சொன்னாங்களே ஒண்ணும் தோணலையே?’ என்று மனம் எதையாவது தொடர்ச்ச்சியாக நினைக்கும் போது, எங்கே போய் தியானம் வரும்?

இருந்தாலும் தியானம் செய்வது எளிது தான்.

No comments:

Post a Comment